Sunday, August 29, 2010

நகரங்களில் தரமான தண்ணீர் இல்லை


பி.பி.சி.யில் வெளிவந்த சித்தி அப்படியே கொடுக்கப் பட்டிருக்கின்றது.

"இந்தியாவில் முதல்தரமான நகரங்கள் என வரையறுக்கப்பட்ட 423 நகரங்களில், வெறும் 39 நகரங்களில் மட்டும்தான், தரமான குடிநீர் கிடைப்பதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் சார்பில் கடந்த 2009-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை 423 முதல் தர நகரங்களிலும் தரமான குடிநீர் தொடர்பான ஆய்வு நடத்தப்பட்டதாக நகர்ப்புற மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் செளகத் ராய் தெரிவித்துள்ளார்.
 
பல்வேறு அம்சங்களின் அடிப்படையில், அதிகபட்சமாக 7 மதிப்பெண் என நிர்ணயிக்கப்பட்டு இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன. அதில், சென்னை, டெல்லி உள்பட எந்த ஒரு பெருநகரமும் அந்தத் தேர்வில் வெற்றி பெறவில்லை. டெல்லியைப் பொருத்தவரை, டெல்லி கன்டோன்மென்ட் பகுதிதான் அதில் தேர்ச்சி பெற்றிருக்கிறது. ஆனால், டெல்லியின் பிரதான நகரம் தேர்ச்சி்ப் பட்டியலில் இல்லை. சென்னை நகரம் 4.6 மதிப்பெண்களை மட்டும் பெற்றுள்ளது.
 
நவி மும்பை ஏழுக்கு 4.9 மதிப்பெண்களையும், கிரேட்டர் மும்பை 4.4 மதிப்பெண்களையும் பெற்றிருக்கின்றன. தகவல் தொழில்நுட்பத் தலைநகராகக் கருதப்படும் பெங்களூர், 6 மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறது.
 
பிரதான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஷிம்லா, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி வெற்றி பெற்ற மக்களவைத் தொகுதியான ரேபரேலி, இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட ஜம்மு, காஷ்மீர் மாநிலத் தலைநகர் ஷ்ரீநகர் உள்ளிட்ட பல நகரங்கள், மதிப்பெண் பட்டியலில் வெறும் பூஜ்ஜியத்தில் உள்ளன. அதாவது இந்த நகரங்களில் குடிநீர் குறைந்தபட்சம் கூட பாதுகாப்பானதாக இல்லை என்பதையே அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
 
தமிழ்நாட்டைப் பொருத்தவரை, சென்னை மட்டுமன்றி எந்த ஒரு நகரமும், முழுமையான, தரமான குடிநீர் கிடைக்கும் நகரமாகத் தேர்வு பெறவில்லை.
அதிகபட்சமாக, திருநெல்வேலி நகரம் 6.4 மதிப்பெண்களைப் பெற்று, அகில இந்திய வரிசையில் 95வது இடத்தில் உள்ளது. ஆனால், தமிழகத்தில் இந்த நகருக்குத்தான் முதலிடம். அடுத்ததாக, திருச்சி 5.2 மதிப்பெண்களுடன் மாநிலத்தில் இரண்டாவது இடத்தில் உள்ளது. 
ராஜபாளையம், திண்டுக்கல் மதுரை, கும்பகோணம், புதுக்கோட்டை உள்ளிட்ட நகரங்கள் ஐந்து மற்றும் நான்குக்கு இடைப்பட்ட மதிப்பெண்கள் பட்டியல் பெற்ற நகரங்களில் உள்ளன. தொழில் நகரமான கோவை 2.8 மதிப்பெண்களையும் பின்னலாடை நகரமான திருப்பூர் 2.1 திப்பெண்களையும், தஞ்சாவூர் 1.7 மதிப்பெண்களையும் மட்டுமே பெற்றுள்ளன.
புதுச்சேரி நகரம், 3.5 மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறது."
நன்றி – பி.பி.சி.

1 comments:

Unknown said...
This comment has been removed by the author.